சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.390   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

-
துன்னார் முனைகள் தோள்வலியால்
வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில்
நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம்
பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில்
முயன்றார் களந்தை முதல்வனார்.

[ 1]


பகைவர் எதிர்த்து நின்ற போரில், அவர்களைத் தம் தோளின் வன்மையால் வெற்றி பெற்றுச், சூலப்படையை ஏந்திய சிவபெருமானின் நல்ல திருப்பெயராய திருவைந்தெழுத்தைத் தம் நாவால் நாள் தோறும் சொல்லும் நன்மையில் மிக்கவர், பல நாள்கள் இறைவனின் அடியவர்தம் திருவடிகளைப் பணிந்து போற்றிவரும் முதன்மையான தொண்டில் முயன்றவர், களந்தைத் தலைவரான கூற்றுவ நாயனார் ஆவர். *** களந்தை - களப்பாள் என வழங்கப்பெறுகிறது. சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், முள்ளி ஆற்றின் தென் கரையில் உள்ளது.
அருளின் வலியால் அரசொதுங்க
அவனி யெல்லாம் அடிப்படுப்பார்
பொருளின் முடிவுங் காண்பரிய
வகையால் பொலிவித் திகல்சிறக்க
மருளுங் களிறு பாய்புரவி
மணித்தேர் படைஞர் முதல்மாற்றார்
வெருளுங் கருவி நான்குநிறை
வீரச் செருக்கின் மேலானார்.

[ 2]


சிவபெருமானின் திருவருள் துணையால் மன்னர் களும் அஞ்சி ஒதுங்கிக் கீழ்ப்படும்படி, நிலம் முழுதும் தம் ஆட்சியின் கீழ்வருமாறு செய்து, பொருள்களின் எல்லை காண இயலாதவாறு சேர்த்துப், போரில் வெற்றிபெறும்படியாக மருட்சி செய்யும் யானை கள், பாய்ந்து செல்லும் குதிரைகள், அழகிய தேர்கள், படை வீரர்கள் ஆகிய நால்வகைப் படைப் பெருக்கமும் கொண்டு, பகைவர்களும் அஞ்சி ஓடத்தக்க வீரத்தைக் கொண்டு பெருமிதத்தால் மேம்பட்டவ ராய் விளங்கினார். *** கல்வி, தறுகண், இசைமை, கொடை ஆகிய நால்வகை யாலும் பெருமிதம் தோன்றும் என்பர் தொல்காப்பியர். கூற்றுவருக்கு வந்த பெருமிதம் தறுகண்மையால் (வீரத்தால்) வந்ததாகும்.
வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.

[ 3]


வெற்றி பெறும் செயல் மேன்மேல் பெருக, தும்பைப் பூவைச் சூடி, மன்னருடன் செய்யும் போர்கள் பலவற்றையும் கண்டு அப்போர்த் தொழிலின் நிறைவாக வெற்றி அடையும் வகையில் வாகை மாலையோடு பொருந்திய மணமுடைய மலர் மாலைகளையும் சூடி, அவ்வேந்தர்களின் வளநாடுகளை எல்லாம் கையகப்படுத்தி, மன்னர்க்குரிய முடி ஒன்று தவிர, மற்ற செல்வங்கள் எல்லாவற்றையும் அவர் உடையவர் ஆனார். *** களம் வகுத்துப் போர் செய்யுங்கால் தும்பையும், வெற்றி பெற்றதும் வாகை சூடலும் மரபு.
மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.

[ 4]


செழுமையான இவ்வுலகத்தைக் காக்கின்றவராய், நவமணிகளையுடைய பெரிய முடியைச் சூட்டுவதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களை வேண்ட, அவர்கள் சோழர்களின் தொன்று தொட்டு வரும் குல முதல்வருக்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம் என்று கூறி, சேர மன்னரின் மலை நாட்டை அடைவாராய், *** சோழமன்னர்களின் மணிமுடி தில்லைப் பேரம்பலத்தில் பாதுகாப்பாக வைக்கப் பெற்று, அவ்வச் சோழ மன்னர்களும் முடி சூடுங்கால் தில்லைவாழ் அந்தணர்களால் அம்முடி சூட்டப்பெற்றுப், பின்னரும் அவ்வம்பலத்திலேயே வைக்கப்பட்டு வந்தது என்பது இதனால் தெரிய வருகின்றது. சோழர்கள் முடி சூடிக் கொள்ளும் பதிகள் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், கருவூர், சேய் ஞலூர் ஆகிய ஐந்துமாம் எனச் சண்டீச நாயனார் வரலாற்றால் அறியப் படுகின்றது. தில்லையில் சூடிக் கொள்ளும் மரபும் உளதாதல் இவ் வரலாற்றால் அறியப்படுகின்றது.
ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.

[ 5]


கூத்தப்பெருமானிடத்து ஒரு நெறிய மனங் கொண்ட தில்லைவாழ் அந்தணர்கள், பெருமை கொண்ட அம் மணிமுடியைத் தங்களுக்குள் ஒரு குடியினர்பால் அருமையாய்க் காவல் செய்யும்படி வைத்து, இரு மரபும் தூயவரான அவர்கள், சேர நாட்டை அடைந்த பின்பு, கூற்றுவனார் தமக்குற்ற ஐயப்பாட்டினால் உள்ளம் தளர்ந்து, தில்லையம்பலத்தில் ஆடும் இறைவரின் திருவடியைப் பணிவாராய், *** ஒருமை - கூத்தப்பெருமானிடத்துக் கொண்ட ஒருமை. இருமரபு - தாய், தந்தையர் ஆகிய இருமரபுகள். கூத்தப்பெருமா னுக்கு வழிபாடாற்றி வரும் கடப்பாடு இருத்தலின், தமக்குள் ஒரு குடியினரைமட்டும் தில்லையிலேயே இருக்கச் செய்தனர். அவரிடம் இம்முடியைச் சேமமாக வைத்தனர். வரும் ஐயுறவு - தோன்றிய ஐயப் பாடு. முடிசூட்டுதற்குரிய தில்லைவாழ் அந்தணர்கள் இடம்பெயர்ந் துறைந்த நிலையில், முடிசூடுவதா? தவிர்ப்பதா! அன்றி வேறு வழி காண்பதா என்று ஐயுற்ற நிலை.
Go to top
அற்றை நாளில் இரவின்கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம்
பெறவே வேண்டும் எனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக்
கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளால் அவைதாங்கி யுலக
மெல்லாந் தனிப் புரந்தார்.

[ 6]


'அடியேன் பெருமானின் மலர் போன்ற அடிகளை மணிமுடியாகப் பெறும் பேறு பெற வேண்டும்,' எனப் போற்றி வாழும் பற்றை விடாது துயில்கின்ற அவருக்கு, அன்றைய இரவில், கனவில் இறைவர் தம் திருவடிகளை முடியாய்ச் சூட்டியருளப், பொருந்திய திருவருளால் அவ்வடிகளையே மணி முடியாய்த் தாங்கிக் கொண்டு உலகம் எல்லாவற்றையும் தனியாட்சி புரிந்து வந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
அம்பொன் நீடும் அம்பலத்துள்
ஆரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ்
கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர எய்தும்
பெரும்பூ சனை யியற்றி
உம்பர் மகிழ அரசளித்தே
யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.

[ 7]


அழகிய பொன்னால் இயன்ற அம்பலத்தில், உண் ணத் தெவிட்டாத அமுதெனத் திருக்கூத்தை இயற்றும் இறைவர், இவ்வுலகத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயில்களில் எல்லாம், தனித் தனியாய் இவ்வுலகத்து வாழும் உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையுமாறு, இறைவற்குப் பொருந்தும் பெரிய பூசனைகளைச் செய்வித்துத், தேவர் மகிழும்படி ஆட்சி செய்து, உமையொரு கூறரான சிவபெருமானின் திருவடி நீழலை அடைந்தார்.
குறிப்புரை:

காதற் பெருமைத் தொண்டின்நிலைக்
கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக்
கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை
நடைநூற் பாவில் நவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை
யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.

[ 8]


மிக்க விருப்பமும், பெருமையுமுடைய தொண்டில் நிலைத்த, கடல் சூழ்ந்த உலகத்தைக் காத்து ஆட்சிசெய்து, குற்றம் நீங்குமாறு முயன்ற களந்தைக் கூற்றுவ நாயனாரின் திருவடியை வணங்கி, அத்துணையால் ஒலி வடிவான மறைகளைத் தந்து உலகைக் காக்கும் இறைவரை, நெறியின் இயன்ற பாக்களால் போற்றி மகிழும் இறையுணர்வு வாய்ந்த 'பொய்யடிமை இல்லாத புலவர்' எனப் போற்றப் பெறும் திருக்கூட்டத்திற் சேர்ந்த அடியவர்களின் செயலைச் சொல்லப் புகுகின்றோம்.
குறிப்புரை:

தேனும் குழலும் பிழைத்த திரு
மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும்
சடையார் தூது தருந்திருநாட்
கூனும் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றே
னேழு பிறப்பின் முடங்குகூன்.

[ 9]


தேனும் புல்லாங்குழலும் என்ற இவற்றை வென்ற இனிமை கொண்ட மொழியையுடைய பரவையாரின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, மதியும் பாம்பும் பகை தீர்ந்து வாழ்தற்கு இடமான திருச்சடையையுடைய பெருமான் தூது போந்த நாளில், கூனனது கூனையும் குருடனின் குருட்டுத் தன்மையையும் தீர்த்துப் பணி கொள்பவரான நம்பி ஆரூரரின் ஒளிபொருந்திய திருவடிகளை யானும் போற்றி, எழுவகைப் பிறப்பினும் உட்பட்டு முடங்கிக் கிடக்கும் தன் மையான கூன் தன்மையையும், அவற்றுள் செலுத்தும் அறியாமை யான குருட்டுத் தன்மையையும் போக்கிக் கொள்கின்றேன். *** வகைநூல் ஆரூரருக்கு மாலையையும் வெற்றிலையை யும் தந்து வந்த கூனனும் குருடனுமாய இருவருக்கும் அவரவருக் குற்ற நோயைத் தீர்த்தருளினார் என்பதொரு வரலாறுகூறி ஆரூரரைப் போற்றி மகிழ்கிறது. விரிநூலில் இந்நிகழ்ச்சி இறைவன் தூதுபோய நன்னாளில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.
இக் கூனும், குருடும் ஆய பணியாளர்கள் பரவையார் மாளிகை யில் பணியாற்றி வந்தவர் என்பர் சிலர். சிவக்கவிமணியார் இதனை மறுத்து, இறைவரால் புலவி தீர்க்கப்பெற்றபின், நம்பி ஆரூரர் மகிழ்வுடன் பரவையார் மாளிகைக்குச் செல்லுகின்ற போது, மங்கலப் பொருள்களை எடுத்து வந்த பணியாளர்களுடன் அத்திருக்கோயில் அகத்திருந்த கூனும், குருடும் ஆய இருவரும் உடன் வர, அவ்விருவர் தம் உடற்குறைபாடுகளையும் நம்பி ஆரூரர் நீக்கியமையையே இந்நிகழ்ச்சி கட்டுரைக்கின்றது என்பர். இவ்வரலாறு சுந்தரர் வரலாற்றில் இயைபு பட்டிலாமையே இவ்வாறெல்லாம் என்னற்கு இடனாயிற்று. ஆசிரியர் சேக்கிழார் ஆண்டு இச்செய்தியைக் குறியா மைக்குக் காரணம் தெரிந்திலது.
இனி இவ்விரு நோய்களையும் சுந்தரருக்கு உற்றதாகக் கூறி அவற்றை இறைவன் தீர்த்தருளினார் என்பாருமுளர். கூன் உற்றது, சுந்தரர் கண் நீங்கிய நிலையில் கோல் ஊன்றி நடப்ப அதனால் ஆய தென்பர் அவர். கூற்றுவ நாயனார் புராணம் முற்றிற்று. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song